

'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் முதல் உரையை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால் அப்படி குறிப்பிட வேண்டாம் என்று சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.
பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேசும் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று கூறுவார்கள்.
தமிழக சட்டசபையில் இன்றும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.லதாவும் இதனை முன்மொழிந்தார். அவர் பேசுகையில், "கன்னிப் பேச்சு என்ற வார்த்தை ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் அதனை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்," கடந்த சட்டப்பேரவையிலேயே வானதி சீனிவாசன் இதுபற்றி பேசியுள்ளார். கடந்த அவையிலும் இதனை பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். சௌமியா சொன்னது நல்ல ஆலோசனை. இது ஒரு மரபாக உள்ளது. எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சியில் இதனை பரிசீலனை செய்யுமாறு வழிமொழிகிறேன்" என்றார்.