குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

குடும்பத் தகராறில் ஒன்றரை வயது குழந்தையுடன், தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on: 

ஈரோடு அடுத்த மகுடஞ்சாவடி - வீரபாண்டி ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ஒரு ஆண் குழந்தையுடன் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நள்ளிரவு ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ரெயில் தண்டவாளம்

அப்போது ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆணின் உடலும், ஒரு குழந்தையின் உடலும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரின் உடலையும் குழந்தையின் உடலையும் மீட்ட ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட நபரின் அடையாளம் தெரியவந்தது.

இது குறித்த விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் நெய்க்காரபட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்(27). கூலி தொழிலாளி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் சாய் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், தினசரி மது அருந்தி விட்டு வந்து, தனது மனைவி வித்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வித்யா தனது மகன் சாய் ரித்விக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஆட்டையாம்பட்டி

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி வித்யாவுடன் சண்டை போட்டு, தனது குழந்தை சாய் ரித்விக்கை விஜயகுமார் எடுத்து சென்றார். பின்னர், ஆட்டையாம்பட்டியில் உள்ள தனது தந்தை மற்றும் சகோதரிகளின் பொறுப்பில் குழந்தையை விட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில், தனது சகோதரி ரூபாஸ்ரீயிடம் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்ற விஜயகுமார், தனது மனைவி வித்யாவுடன் சேர்ந்து வாழ முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ள போவதாக, சகோதரி ரூபாஸ்ரீக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும், லோக்கேஷனும் அனுப்பினார்.

தற்கொலை

அதனைத்தொடர்ந்து, ஈரோடு எல்லைக்குட்பட்ட மகுடஞ்சாவடி - வீரபாண்டி ரெயில் நிலையத்திற்கு இடையே அப் லைன் என்ற இடத்தில், நள்ளிரவு 12.05 மணிக்கு, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த கூட்ஸ் ரெயிலில் விஜயகுமார் குழந்தையுடன் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

குடும்பத் தகராறில் ஒன்றரை வயது குழந்தையுடன், தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com