சிவகங்கை அருகே பயங்கரம்: விவசாயியை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இன்று காலை நடைபெற்ற இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
கொலை
Published on: 
Summary

சிவகங்கை அருகே மகேஸ்வரன் என்ற விவசாயியை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்றது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே தேவயானைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். விவசாயியான இவர் பல்வேறு தொழில்களும் செய்து வந்தார். தினமும் காலையில் கடை வீதிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து விவசாய நிலத்தை பார்த்த பிறகு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கும்பல் சுற்றி வளைப்பு

இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் அருகே உள்ள இடையமேலூர் கடைவீதிப் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளது. ஆனால் அதனை மகேஸ்வரன் அறிந்திருக்கவில்லை. காலை நேரம் என்பதால் விவசாய பணிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் திடீரென்று அந்த மர்ம நபர்கள் மகேஸ்வரனை சுற்றி வளைத்தனர். மேலும் அவர்களது கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன. அவர்களை பார்த்து பதறிப்போன மகேஸ்வரன், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உயிர் பிழைக்க தலைதெறிக்க ஓடினார்.

வெட்டிக்கொலை

இருந்தபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மகேஸ்வரனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, நெற்றியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்ததில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இன்று காலை நடைபெற்ற இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார், கொலையுண்ட மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் கொலையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார், பழிக்குப்பழியாக நடந்ததா? அல்லது முன்விரோதமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சிவகங்கை அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காலை நேரத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X