கிருஷ்ணகிரி அருகே காப்புக்காட்டில் மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி பரிதாப பலி!

இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Elephant Attack
Published on: 
Summary

அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை, புதரில் மறைந்திருந்த காட்டு யானை ஓட ஓட விரட்டித் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மறைந்திருந்து தாக்கிய காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னேபுரம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (59), விவசாயி. இவருக்கு காலம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலை முனியப்பா தனது மாடுகளை மேய்ச்சலுக்காக மஞ்சி காப்புக்காடு எப்பெல்லா வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியின் புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று, திடீரென முனியப்பாவை நோக்கி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தப்பியோட முயன்றபோது, யானை அவரை விடாமல் விரட்டிச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திலேயே மரணம்

யானையின் பலத்த தாக்குதலுக்கு ஆளான முனியப்பா, கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த வனப்பகுதியில் ஆடு மற்றும் மாடுகளை மேய்க்கச் சென்ற மற்ற கிராம மக்கள், முனியப்பா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் வனத்துறை விசாரணை

தகவலின் பேரில் வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், முனியப்பாவின் உடல் பிரேத பரிசோதனைக்காகத் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காப்புக்காட்டு பகுதியில் யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த மலைக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com