நிதி பகிர்வு தீர்மானம்.. திமுக, அதிமுக ஆதரவு - சட்டசபையில் நிறைவேற்றம்

சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.
சட்டசபை
சட்டசபை
Published on

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

காவிரி விவகாரம்

அதன் தொடர்ச்சியாக இன்று கூடிய அவையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.

இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற, அவருக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு பதிலளித்து பேசினர்.

இதன்மீது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, "மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி பகிர்வை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதரத்தைக் கொண்டது.

மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. செலவு பொறுப்பு மாநிலங்களிடம் உள்ளது. வருவாய் ஆதாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது.

மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரம் குறையும் சூழல் இப்போது உள்ளது. நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

பெண் தொழிலாளர்களின் பங்களிப்பில் முதல் மாநிலம் தமிழ்நாடு, ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தின் தூணாக தமிழ்நாடு பொருளாதாரம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த புறக்கணிப்பு என்பது தான் கேள்வி" எனப் பேசினார்.

வரி பகிர்வு தீர்மானம்

இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.

அப்போது பேசிய அவர், "மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.

தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com