

மொபட்டில் தனியாக சென்ற பெண்ணை நோட்டமிட்டு நடைபெற்றுள்ள இந்த நகைப்பறிப்பு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி நம்பி செல்வி (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மகாராஜன் பழக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் நம்பி செல்வி உதவியாக இருந்து வருகிறார். அவர்களது 2 மகள்களும் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நம்பி செல்வி தனது மகள்களை தினமும் காலை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துச்சென்று விட்டு விட்டு, பின்னர் மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 2 மகள்களையும் நம்பி செல்வி மொபட்டில் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
புலியூர்குறிச்சி ஊருக்கு முன்பாக சுமார் 50 மீட்டர் தூரத்தில் நம்பி செல்வி சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து கொண்டு நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு நம்பி செல்வியின் மொபட் அருகே தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுள்ளார்.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் நம்பி செல்வியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்துள்ளார். இதில் ஒரு பவுன் மட்டும் நம்பி செல்வி கையில் சிக்கிய நிலையில், 14 பவுனை பறித்துக்கொண்டு ஹெல்மட் கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றான்.
உடனே நம்பி செல்வி கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. இதுகுறித்து நம்பி செல்வி ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹெல்மட் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். மொபட்டில் தனியாக சென்ற பெண்ணை நோட்டமிட்டு நடைபெற்றுள்ள இந்த நகைப்பறிப்பு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏர்வாடி வரையிலும் உள்ள சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.