

நேபாளத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு, முறையான தகவல் பரிமாற்றத்தை உறுதிசெய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கலந்தது. இது டிமுரே மற்றும் சியாப்ரு பெசி ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
எதிர்பாரா நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 46 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்தது. இதில் 105 பேர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.