மேட்ரிமோனி திருமண மோசடிகளைத் தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், புதிய விதிகள் மற்றும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் திருமண தகவல் இணையதளங்கள் மூலம் நடக்கும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்க, முறையான வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதன்படி இணைய தளத்தில் வரும் விவரங்களைச் சரிபார்த்தல், மேட்ரி மோனி இணையதளங்களில் வரன் தேடுவோர் பதிவிடும் வயது, பிறந்த தேதி, முகவரி மற்றும் திருமண நிலை போன்ற அடிப்படைத் தகவல்களை, ஆவணங்கள் மூலம் கட்டாயம் சரிபார்த்த பிறகே இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த இணையதள பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, ஆதார் அங்கீகாரத்தை தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தும் நபர்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அங்கீகாரம் தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
ஆதார் அங்கீகாரம் அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு ஆகியவற்றை அடையாள ஆவணமாக அளிக்க வேண்டும்.
மேட்ரிமோனி இணைய தளங்களில் போலி கணக்குகளை தடுப்பது மற்றும் திருமணம் தொடர்பான மோசடிகளை கட்டுப்படுத்துவதும் நோக்கில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.