

ரப்பர் தோட்டத்தில் அதிகாலை மற்றும் காலை வேளைகளில் பால் வெட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், யானைகளின் இந்தத் தொடர் நடமாட்டத்தைக் கண்டு கடும் அச்சமடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளான பேச்சிப்பாறை, கோதையார், பெருஞ்சாணி மற்றும் குற்றியாறு போன்ற இடங்களில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வனப்பகுதியில் உள்ள மரங்களை முறித்துச் சேதப்படுத்தும் யானைகள், இரவோடு இரவாக வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து வருகின்றன. தென்னை, வாழை போன்ற பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் இரவில் தூக்கமின்றி பீதியில் உறைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காளிகேசம் அரசு ரப்பர் தோட்டத்தை ஒட்டி ஓடும் காட்டாற்றுக்கு வந்த சிறிய குட்டிகள் உட்படப் பல யானைகள், தெளிந்த நீரில் தாகம் தணித்தும் விளையாடியும் சில மணி நேரம் அங்கு நேரத்தைக் கழித்து விட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.
ரப்பர் தோட்டத்தில் அதிகாலை மற்றும் காலை வேளைகளில் பால் வெட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், யானைகளின் இந்தத் தொடர் நடமாட்டத்தைக் கண்டு கடும் அச்சமடைந்துள்ளனர்.
யானைகள் கூட்டம் கிராமப் பகுதிகளுக்கோ அல்லது மனிதக் குடியிருப்புகளுக்கோ புகாதவாறு தடுக்க, வனத்துறையினர் மற்றும் வனக்காப்பாளர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மலை கிராம மக்கள் தெரிவிக்கையில், "யானைகள் குடியிருப்பு பகுதிக்குகள் வருவதைத் தடுக்க வனத்துறை உடனடியாக அகழிகள் அமைப்பதுடன், சோலார் மின்வேலிகளைச் சீரமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்கு மாறும், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது