

தமிழகத்தில் மின்தடையை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. பீக் ஹவர்களில் 3,000 மெகாவாட் மற்றும் நள்ளிரவு நேரங்களில் 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்து உள்ளது. இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதும், போராட்டங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இரவு நேரங்களில் மின் வெட்டு நிலவுதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் வெட்டை சமாளிக்க மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு உள்ளது. வருகிற 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பீக் ஹவர்ஸ் எனப்படும் பிற்பகல் 6 மணி - நள்ளிரவு 12 மணி வரை தேவையான 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையான 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு உள்ளது.