பென்னாகரம் அருகே மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற கிளி ஜோதிடர் சிறையில் அடைப்பு

மூதாட்டியையே கிளி ஜோதிடர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் அருகே மூதாட்டியை  பலாத்காரம் செய்து கொன்ற கிளி ஜோதிடர் சிறையில் அடைப்பு
Published on: 
Summary

மூதாட்டியைப் பாலியல் பலாத்காரம் செய்து, நகை மற்றும் பணத்துக்காக அடித்துக் கொலை செய்த வழக்கில், கிளி ஜோதிடரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயலட்சுமி (75). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருவதால், ஜெய லட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கொலை

இந்நிலையில் கடந்த 14-ந் தேதி ஜெயலட்சுமியை அவரது குடும்பத்தினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அருகில் வசிக்கும் உறவினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ஜெயலட்சுமி தலையில் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

போலீசார்

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்க நகையும், வீட்டில் இருந்த பணமும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எஸ்.பி., டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

இந்தக் கொலை தொடர்பாக தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலையாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.

தனிப்படைகள்

சேலம் சரக டி.ஐ.ஜி. தேவராணியும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குற்றவாளியை விரைவாகக் கண்டுபிடிக்கக் கூடுதல் தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மொத்தம் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்ததுடன், நகை மற்றும் பணத்துக்காகக் கொலை நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

சி.சி.டி.வி. பதிவுகள் மூலம் சிக்கிய ஜோதிடர்

சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியைச் சேர்ந்த முனுசாமியின் மகன் முருகன் (54) என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

கிளி ஜோதிடரான முருகன், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மூதாட்டியின் வீட்டருகே தங்கி, அங்குள்ள மரத்தடியில் கிளி ஜோதிடம் பார்த்து வந்து உள்ளார். மரத்தடியில் உள்ள பெட்டிக்கடையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், செல்போனுக்கு சார்ஜ் போடுவது, தண்ணீர் வாங்கிக் குடிப்பது, உணவு பெறுவது உள்ளிட்ட தேவைகளுக்காக மூதாட்டியின் உதவியை நாடி அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

கைது

இதையடுத்து முருகனைப் பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி தனியாக வசிப்பதை நோட்டமிட்டு வந்த முருகன், சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியைத் தாக்கிப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவரைக் கொலை செய்து விட்டு நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாகவும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட முருகன் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட உதவிகளைச் செய்த மூதாட்டியையே கிளி ஜோதிடர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com