

சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் ஒரு தனியார் செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஒரு முதியவர் திடீரென ஏற ஆரம்பித்தார். பின்னர் அவர் செல்போன் டவரின் உச்சி பகுதிக்கு சென்று கோஷமிட்டார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கிவரச்சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அந்த முதியவர் அதை கேட்காமல் தொடர்ந்து மேலேயே நின்று கொண்டு இருந்தார்.
இதையடுத்து பொது மக்கள் கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து செல்போன் டவரில் நின்று கொண்டு இருந்த முதியவரை கீழே இறங்கி வருமாறு மைக்மூலம் அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரில் நின்று கொண்டு இருப்பது சிவதாபுரம் பெரியபுத்தூர் பகுதியை சகாதேவன் (65) என்று தெரியவந்தது. மேலும் இவர் தனது மகன் ராமசாமியை ஒரு கொலை வழக்கில் கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்து விட்டதாகவும், எனவே மகனை விடுதலை செய்தால் தான் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருவேன் என்றும் கூறினார்.
போலீசார், தீயணைப்பு துறையினர் பலமுறை மைக் மூலம் முதியவரை சமாதானம் செய்தனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து காலை 11 மணியை தாண்டியும் செல்போன் டவரில் நின்று கொண்டு இருந்தார்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிகளவில் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
போலீசாரின் விசாரணையில் முதியவர் சகாதேவன் ஏற்கனவே 2 முறை செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.