

எல்-நினோவின் தாக்கத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், எல்-நினோவால் ஏற்பட்ட வறட்சியால் பல பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக புகழ் பெற்ற பத்தமடை பாய் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதே சான்றாக உள்ளது.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் கோரப்புல்லில் இருந்து நெய்யப்படும் பாய், உலக அளவில் பிரபலம். 1953-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணிக்கு பத்தமடை பாய் பரிசாக அளிக்கப்பட்டது. இந்தப் பரிசுப் பரிமாற்றம்தான் பத்தமடைப் பாயை அயல்நாட்டிலும் பேசுபொருளாக்கியது.
300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய், மத்திய அரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய் செய்வதை வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்.
ஆனால் கடுமையான விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் பத்தமடையில் பாய் தொழில் தற்போது நலிவடைந்துள்ளது. 300 குடும்பத்தினர் இருந்த இடத்தில், தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு செய்வதாக கூறுகிறார்கள்.
அதிலும், கைத்தறி நெசவு செய்பவர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர். பெரும்பாலும் தற்போது விசைத்தறி தான் ஓடுகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும், பத்தமடைப் பாய் தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பிற மாவட்டங்களில் பாய் நெய்வதற்கான கோரைப்புற்களை தோட்டத்தில் பயிரிட்டு உற்பத்தி செய்கின்றனர்.
ஆனால், பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற்கையாகவே வளரும் கோரைப்புற்கள் கொண்டு பாய் நெய்வதால் அந்த பாய் உடலுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் பாய் நெய்யும் தொழிலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.
சமீபகாலமாக தாமிரபரணி நதியில் சோலைக் காடுகள் அழிக்கப்பட்டதால் கோரைப்புற்கள் அதிக அளவு கிடைப்பதில்லை. இதனால் பத்தமடை நெசவாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் காவிரிப் படுகையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கோரைப் புற்களை வாங்கி பாய் நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது, எல் நினோவால் ஏற்பட்டுள்ள வறட்சியால் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோரைப்புல் விலை 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சாயம், நூலின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பத்தமடை பாயின் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விலைவாசி உயர்வால், பாய் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உற்பத்தியாளர் சுலைமான் கூறுகையில், “நான் இந்த தொழிலில் 5-வது தலைமுறையாக இருக்கிறேன். சமீபகாலமாக மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. கோரைப் புல், சாயப்பொடி, நூல் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோரைப்புல் பெரிய பண்டல் ரூ.1,300-ல் இருந்து ரூ.2,500 ஆக அதிகரித்துள்ளது. சாயப்பொடி கிலோ ரூ.900-ல் இருந்து ரூ.1,350 ஆக அதிகரித்துள்ளது. நூல் விலை ரூ.160 -ல் இருந்து ரூ.240 ஆக இருக்கிறது. காவிரிப் படுகையில் கோரைப்புல் சரியாக விளையவில்லை. ஏற்கெனவே போட்ட கோரைப்புல்லும், வறட்சியால் கருகி போய்விட்டது.
இவற்றின் காரணமாக ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையான பட்டுப்பாயை இன்று ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்ய வேண்டி உள்ளது. தொழிலாளர்களுக்கும் அதிக கூலி கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து பாய் வாங்க வேண்டி உள்ளது.
எனவே திரும்பவும் செழிப்பாக கோரைப்புல் விளைந்து விற்பனைக்கு வந்தால் தான், பாய் விலை குறையுமா என்பதை பார்க்க வேண்டும். முன்பு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இயற்கையாக விளையக்கூடிய நாட்டு கோரை புல் கிடைத்தது. ஆனால், தற்போது தண்ணீர் சரிவர இல்லாததால் இந்த நாட்டுக்கோரைப்புல் விளையவில்லை.
இதனால் காவிரிப்படுகையில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் கோரைப்புல்லை வாங்கி வருகிறோம். விசைத்தறி பாய், ரூ.100-ல் இருந்து ரூ.550 வரை விற்பனை ஆகிறது. பட்டுபாய் ரூ.1,700-ல் இருந்து, அதிகபட்சம் ரூ.13 ஆயிரம் வரைக்கும் உள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாய் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளோம்.
பட்டுப்பாய்தான் விலை உயர்ந்த பாய். ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள பட்டுபாய் உற்பத்தி செய்ய 45 நாட்கள் வரை ஆகும். ஆனால் பெரிய அளவில் கூலி கிடைப்பதில்லை. எனவே பட்டுபாய் உற்பத்தி செய்த பல பேர் தற்போது இல்லை. பத்தமடை பாய்க்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் பத்தமடையில் 300 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 35 குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர்.
எனவே அரசு நலவாரியம் மூலம் எங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து, தொழில் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்றார்.