பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
Edappadi Palaniswami
Published on

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்துஸ்தான் ஆயில் நிறுவனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், தமிழ்நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

த.வெ.க. அரசு

ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும், குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில் வருகின்ற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும், அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com