

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் தலைவர்கள் த.வெ.க. ஆட்சி நீடிக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். ஜனநாயகத்தின்படி மக்கள் அளித்த தீர்ப்பை இவர்களுக்கு ஏற்க மனமில்லை என்று துரை வைகோ கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மட்டும் மின்சார பாதிப்பு இல்லை. இது நாடு முழுவதும் உள்ள பிரச்சனை. கடந்து ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3500 முதல் 4000 மெகா வாட் அதாவது 30 சதவீதம் மின்சார தேவை அதிகமாகி உள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மின்சார உற்பத்தி குறைவாக உள்ளது. இதேபோல் மின்சாரத் தேவையும் அதிகமாக உள்ளது. இதனால் சற்று அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலையும் இருந்தது. அது சில சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடந்த 10 வருடங்களாக நிர்வாக சீர்கேடு தான் காரணம். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கான எந்த நடவடிக்கையும் கடந்த அரசு எடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்சார உற்பத்திக்காக திட்டமிட்டு இருந்தார்கள்.
அதற்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு உபகரணங்கள் வாங்கினர். அது எல்லாம் உப்புக்காட்டில் பாழாய் போய் விட்டது. அந்த 13 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது. இதற்கு கடந்த காலத்தில் ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. தான் பதில் சொல்ல வேண்டும். தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.வின் தலைவர்கள் த.வெ.க. ஆட்சி நீடிக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். ஜனநாயகத்தின்படி மக்கள் அளித்த தீர்ப்பை இவர்களுக்கு ஏற்க மனமில்லை. அதனால் ஏதாவது பிரச்சனை கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றாக இணைந்து செயல்பட திட்டமிட்டவர்கள்.
பொறுப்பான எதிர்க்கட்சிகளாக இல்லாமல் இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்று என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.