

வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை மெதுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையின் நடுவே வந்து நிற்பதுடன், அவ்வழியாக செல்லும் சரக்கு மற்றும் காய்கறி லாரிகளை வழிமறித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் வாசனையை நுகர்ந்து, துதிக்கையை நீட்டி அவற்றை எடுத்துச் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் அந்த காட்டு யானை நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியின் டிரைவர், வேகத்தை குறைக்காமல் யானை மீது மோதுவது போன்று லாரியை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மிரண்ட யானை பின்னோக்கி சென்றது. பின்னர் சுதாரித்து கொண்டு சாலையோரமாக நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்போனில் பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து வன ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காட்டு யானையை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாக லாரியை ஓட்டியதாக கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஜின்ஷாத் (46) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜின்ஷாத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை மெதுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.