

2 மரங்களும் சரிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்களும், சுற்றுலா பயணி களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி என்பது தமிழ் நாட்டின் புகழ் பெற்ற சர்வ தேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மிக முக்கியமான முதன்மைச் சாலையாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வீதி சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கு மிடங்கள், உணவகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் நிறைந்த ஒரு முக்கிய மைய பகுதியாக உள்ளது.
தலசயன பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்களின் போது சுவாமி தேவியருடன் வீதிஉலா வருவதும், தேரோட்டம் நடைபெறுவதும் இந்த பகுதியில்தான்.
தற்போது பூதத்தாழ்வார் அவதார 10-நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் பூதத்தாழ்வார் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி சாலையோரத்தில் இருந்த 2 மரங்கள் தற்போது பட்டுப்போய் காய்ந்த நிலையில் ஆபத்தாக நிற்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன.
மேலும் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை பார்க்க செல்லவும், டி.கே.எம்.சாலை மற்றும் ஒத்த வாடைதெரு மார்க்கட் பகுதிக்கும் இந்த வழியாகத்தான் நடந்து சென்று வருவார்கள். இந்த நிலையில் பட்டுப்போன இந்த மரத்தில் இருந்து தற்போது கிளைகள் ஒடிந்து கீழே விழுந்து வருகிறது. நடந்து செல்வோர் மீதும், வாகனங்கள் மீதும் விழுவதால் அப்பகுதியை கடக்கும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டுப்போன மரம் பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிவதால் ஆபத்தை உணராமல் பல சுற்றுலா பயணிகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள். எனவே 2 மரங்களும் சரிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.