தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல்
Published on: 
Summary

தமிழகத்தில் எஸ்எஸ்ஆர் பணிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் (எஸ்எஸ்ஆர்) தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன.

முன்னதாக வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) நடைபெற்று முடிந்த நிலையில் இந்த எஸ்எஸ்ஆர் பணிகள் நடைபெறவுள்ளன.

எஸ்எஸ்ஆர்

இதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்புப்படி, 1.1.2027 தேதியை வாக்காளராக தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளன.

இதன்படி வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணி கடந்த 2ந்தேதி முடிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த பட்டியலை இன்று காலை 10 மணிக்கு மேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுவார்.

விண்ணப்பம்

வரைவுப் பட்டியலில் வெளியானதும் வாக்காளர்கள் தங்களின் பெயர் இருக்கிறதா? சரியாக இருக்கிறதா? உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து புதிதாக பெயர் சேர்த்தல், இடம் மாற்றம், பெயர் நீக்குதலுக்காக டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 4ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழக வாக்காளர்கள்

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடந்த எஸ்ஐஆருக்கு பின் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரத்து 979 ( 2.78 கோடி ஆண், 2.90 கோடி பெண், 7,656 மூன்றாம் பாலின) வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X