

ஒரு வீட்டின் வளர்ப்பு நாய், 4 கரடிகளையும் நோக்கி குரைத்தபடி துரத்திச் சென்றது. இதையடுத்து கரடிகள் அங்கிருந்து வேகமாக நகர்ந்து, அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றன.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் வருவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள் அவ்வப்போது தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி அருகேயுள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் 4 கரடிகள் ஒன்றாக உலா வந்துள்ளன. கரடிகளை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் வளர்ப்பு நாய், 4 கரடிகளையும் நோக்கி குரைத்தபடி துரத்திச் சென்றது. இதையடுத்து கரடிகள் அங்கிருந்து வேகமாக நகர்ந்து, அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியிருப்பு பகுதிகளுக்கு தொடர்ந்து கரடிகள் வருவதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு அச்சுறுத்தலாக நடமாடும் கரடிகளை பாதுகாப்பான முறையில் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.