

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 60 வயது ஆண் மற்றும் 19 வயது இளம்பெண்ணுக்கு சவாலான ரத்தநாள அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டது. உயர் சிக்கலான இந்த சிகிச்சைகள் முழுமையாக இலவசமாக செய்யப்பட்டு, நோயாளிகள் நலமுடன் உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல மருத்துவ ஆலோசனைகளை பெற்ற பின்னர் 2 நோயாளிகள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த நாள அறுவை சிகிச்சை துறைக்கு வந்தனர்.
முதல் நோயாளி ஒருவருக்கு இதயத்தில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த குழாயான பெருந்தமணியின் வளைவு பகுதியில் ஏற்பட்ட அசாதாரண ரத்தக்குழாய் வீக்கமே அனியூரிசம் எனப்படும். இது எந்த நேரத்திலும் வெடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
மேலும் மூளையின் இரு புறங்களுக்கும் மற்றும் இரு கைகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்கள் இந்தப் பகுதியில் இருந்து பிரியும் இடத்தில் ரத்த வீக்க கட்டி இருந்ததால் இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவால் ஆனதாகும்.
60 வயதான ஆண் நோயாளிக்கு 2 கட்டங்களாக மிக நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக மூளைக்கும் இரு கைகளுக்கும் ரத்தம் செல்லும் 3 முக்கிய ரத்த குழாய்களுக்கும் மாற்றுப்பாதை ஏற்படுத்தும் வகையில் செயற்கை டாக்ரான் ரத்தக் குழாய் பயன்படுத்தி 3 பைபாஸ் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
2-ம் கட்டமாக நவீன எண்டோவாஸ்குலர் தொழில்நுட்பத்தின் மூலம் தொடை வழியாக வடி குழாய் செலுத்தி பெருந்தமணியின் உள்ளே பிரத்யேக ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. இந்த 2 சிகிச்சைகளுக்குப் பிறகு நோயாளி தற்போது நலமுடன் உள்ளார். தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.40 லட்சம் வரை செலவாக கூடிய இந்த உயர் சிக்கலான சிகிச்சை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டதாக ரத்த நாள அறுவை சிகிச்சை டாக்டர் இளஞ்சேரலாதன் தெரிவித்தார்.
மற்றொரு நோயாளியான 19 வயது இளம்பெண்ணுக்கு குடல்களுக்கு ரத்தம் வழங்கும் மிக முக்கியமான ரத்த நாளத்தில் அனியூரிசம் கண்டறியப்பட்டது. இந்த ரத்தக்குழாய் வெடித்தாலோ அல்லது அதில் ரத்த உறைவு ஏற்பட்டாலோ குடல்களுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு குடல் திசுக்கள் அழுகும் அபாயம் உள்ளது. இந்த அனியூரிசம் உடலில் ரத்தக்குழாயுடன் நெருக்கமாக ஒட்டி இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாகவும் அதிக ஆபத்து உள்ளதாகவும் இருந்தது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
ஸ்டான்லி மருத்துவமனை ரத்த நாள அறுவை சிகிச்சை துறை மிக சிக்கலான உயிருக்கு ஆபத்தான 2 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்து உள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவக் குழுவினர் டாக்டர்கள் இளஞ்சேரலாதன், ராதாகிருஷ்ணன், விக்ரமன், கார்த்திக், பத்மினி, சரவண கிருஷ்ணராஜா, ஆனந்த் ஆகியோரை டீன் ஜோதி குமார் மற்றும் ஆர்.எம்.ஓ. வனிதா மலர் ஆகியோர் பாராட்டினர்.