

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,
“மத்திய அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தைத்தான் தெளிவுபடுத்தினாரே தவிர, மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஒரு சட்டரீதியான விளக்கத்தைத் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகத் திரித்துக் கூறக்கூடாது. எந்தவொரு திட்டமும் சட்டப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்; அத்திட்டம் குறித்துத் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கத் தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது.
இப்பிரச்சினையை அரசியல் ஆக்குவதற்குப் பதிலாக, தவெக அரசும், அதன் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு காங்கிரஸும், உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்காக, அதாவது காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கான நியாயமான பங்கைப் பெறுவதற்காக போராட வேண்டும்.
இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 28.337 டி.எம்.சி. நீரில், தமிழ்நாடு வெறும் 3.442 டி.எம்.சி. அளவிலான நீரை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, நமது விவசாயிகளைக் காக்க, தமிழ்நாட்டிற்கான உரிய நீர் பங்கை விடுவிக்கக் கோருவதே உடனடித் தேவையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், அதன் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதியாக நின்றது; இனியும் தொடர்ந்து உறுதியாக நிற்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.