ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு குறித்த கேள்விகளுக்கு தி.மு.க பதில் சொல்லாது- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த ஆட்சியில் காவல்துறையை இயக்கியது தி.மு.க குடும்பம் மட்டும் தான்.
Minister Aadav Arjuna
Published on
Summary

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், காவல்துறை நிர்வாகத்தின் பணிகளில் அரசியல் தலைவர்களின் எந்தவிதமான தலையீடுகளும், அழுத்தங்களும் இருக்காது எனஅமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை தொழிலதிபரான ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.வீரமணி மீது எழுந்துள்ள சிறுமிகள் மீதான போக்சோ பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கு விவகாரத்தில், தி.மு.க அரசை விமர்சித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் விவகாரம் மற்றும் முந்தைய விசாரணைகள் குறித்த கேள்விகளுக்கு திமுக ஒருபோதும் பதில் சொல்லாது எனகுற்றம்சாட்டினார்.

தி.மு.க குடும்ப தலையீடு

கடந்த கால ஆட்சிக் காலங்களில் காவல்துறையின் சுயாதீனமான செயல்பாடுகள் தடுக்கப்பட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, தமிழக காவல்துறையை தி.மு.க குடும்பம் மட்டுமே முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்று சாடினார். அவ்வளவு ஏன், காவல்துறை உயர் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணி நியமனங்களைக்கூட அப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களே தீர்மானித்து இயக்கி வந்தனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், காவல்துறை நிர்வாகத்தின் பணிகளில் அரசியல் தலைவர்களின் எந்தவிதமான தலையீடுகளும், அழுத்தங்களும் இருக்காது என அவர் உறுதி அளித்தார். மேலும், தேர்தல்களில் பண பலம் இல்லாமல் நேர்மையான வழியில் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்பதை காட்டுவதே முதலமைச்சர் விஜய்யின் உண்மையான அரசியல் ஆளுமைத்தன்மை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெம் வீரமணி வழக்கு

ஜெம் கிரானைட்ஸ் தலைவர் ஆர். வீரமணி, சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com