

அமைச்சர் சரத்குமார் வெள்ளை பவுடர் ஒன்றை வைத்திருக்கும் வீடியோ வெளியானது.
இந்த வீடியோவில் போதை பொருள் இருப்பதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் அமைச்சர் சரத்குமார் அது மாத்திரை என்று விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது
இதன்படி சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மேடை அமைப்பது, ஒலி பெருக்கி வைப்பது என போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அப்போது அங்கு வந்த போலீசார் தி.மு.க.வினரிடம் “போராட்டம் நடத்த அனுமதி இல்லை” என்று கூறி ஏற்பாடுகளை நிறுத்துமாறு கூறினார்கள்.
ஆனால் தி.மு.க.வினரோ நேற்றே அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துவிட்டோம். எங்களுக்கு மறுப்பு தெரிவித்து போலீசார் தரப்பில் ஏதும் சொல்லவில்லை. எனவே ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்றுட்டது இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைதுசெய்தனர். காலை 7 மணி அளவில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக தி.மு.க.வினர் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
தொடர்ந்து அமைக்கப்பட்ட மேடை, அனைத்தும் அகற்றப்பட்டது. இதே போன்று தமிழகம் முழுவதும் மற்ற இடங்களிலும் போராட்டத்துக்காக திரண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.