

சென்னை மாநகரம் தனது 387வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.