

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த (FCRA) மசோதாவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த FCRA திருத்த மசோதா, குறிப்பாகச் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் மிகப்பெரிய தாக்குதலாகும்.
இந்த மசோதாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து 16 சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.வில்சன் மற்றும் பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கும், அச்சத்திலேயே வைத்திருப்பதற்கும் மத்திய அரசால் அமலாக்கத்துறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல் இந்த FCRA சட்டமும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளை ஆற்றி கட்டிக்காக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசின் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் அவர்களின் கைக்குச் சென்றுவிடும் ஆபத்து இதில் உள்ளது.
"இது வெறும் சட்டத்தின் பெயரால் துப்பாக்கி முனையில் நடத்தப்படும் கொள்ளை மட்டுமல்ல; சட்டப்பூர்வமாக அரங்கேற்றப்படும் மிகப்பெரிய கொள்ளை" என்று கடுமையாக விமர்சித்த அவர், இந்த ஆபத்தான தீர்மானத்தை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு அமைச்சர் ஷாஜகான் ஆதரவு தெரிவித்து பேசியதாவது, தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம். முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம். கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் நடத்துவோர் கலங்கிப்போய் உள்ளனர். FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? என அமைச்சர் ஷாஜகான் பேசினார்.