

விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் மதுரையில் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்குவதற்காக மக்கள் கடந்த ஒரு வாரமாக அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
இதனால் மதுரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அதிக கூட்டம் பொருட்களை வாங்க திரண்டது. இதனால் விளக்குத்தூண், மாசி வீதிகளில் நெரிசல் ஏற்பட்டன. மேலும் சாலையோர கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் மகிழ்ச்சியுடன் ஏராளமானோர் வாங்கினர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் மதுரையில் தீபாவளி விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. விளக்குத்தூண், மாசி வீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். மேலும் திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு பகுதியில் இன்று மதியம் முதல் நாளை காலை வரை விடிய, விடிய தீபாவளி விற்பனை நடைபெறும்.
இதிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பொருட்களை ஆர்வத்துடன் வாங்குவார்கள். இங்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் மற்றும் சாலைகளில் நடுவே பொருட்கள் குவிக்கப்பட்டும் மலிவான விலையில் பொருட்கள் விற்கப்படும். இதனை வாங்குவதற்கு பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் திரளுவார்கள். இதனால் திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படும்.
இறுதிக்கட்ட விற்பனையில் பொருட்கள் வாங்குவதற்காக மதுரை மற்றும் வெளி பகுதி பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் அதிக அளவில் மக்கள் திரண்டு வருகிறார்கள். தீபாவளி என்றாலே மட்டன் என்றாகி விட்டது. இறைச்சி கடைகளிலும் இன்று காலை முதலே சிறப்பு வியாபாரம் தொடங்கி உள்ளது. அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு ஆயிரக்கணக்கான ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகிறது. இதனால் காலை முதலே அனைத்து இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டு தேவையான இறைச்சிகளை வாங்கி வருகிறார்கள்.
இதேபோல் கோழி, மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அசைவ பிரியர்கள் இங்கு திரண்டாலும் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் சைவ பிரியர்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கி வருகிறார்கள். இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள்.
தக்காளி, உருளை உள்ளிட்ட காய்கறிகளையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளை அலங்கரிப்பதற்கும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்கவும் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி
றார்கள். இதனால் பூக்களின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது.
சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நேற்று முதலே இந்த சிறப்பு பேருந்தில் அதிக அளவில் பயணிகள் மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. தென் மாவட்டங்களுக்கும் அதிக அளவில் மக்கள் செல்வதால் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மற்றும் சென்னைக்கு மதுரை வழியாக செல்லும் ரெயில்களில் வழக்கத்தை விட 5 மடங்கு கூட்டம் காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக மதுரையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கண்கவர் பட்டாசுகள் மற்றும் அதிர் வெடிகளை வாங்கி வைத்துள்ள இளைஞர்கள் தீபாவளி பண்டிகையை வரவேற்க தயாராக உள்ளனர். இனிப்பு பதார்த்தங்கள், வகை வகையான பதார்த்தங்களை தயார் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கவும் மக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெறும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் இன்று இரவு விடிய, விடிய தீபாவளி விற்பனை மும்முரமாக நடைபெறுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.