

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நிறைய புதிய திட்டங்கள் வரும் என புதுக்கோட்டை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த புதிய திட்டங்களும் அறிவிக்காமல் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார்.
முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கு மாணவர்களை வரவழைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் கல்லூரி செமஸ்டர் தேர்வை தள்ளிவைத்தனர்.
அடுத்ததாக புதிய பேருந்து நிலையத்தைத் திறக்கப் போனார். புதிய வழித்தடங்களில் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குப் பயன் தரும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என மக்களும் ஆவலோடு காத்திருந்தார்கள் அங்கேயும் பெருத்த ஏமாற்றம்.
முதலமைச்சர் வருகைக்காக 10 கோடி ரூபாய் செலவு செய்து, ஒரு 45 கிலோமீட்டருக்கு பேரிகார்டு கட்டி பொதுமக்களுடைய பணம் விரயமானதும், நிகழ்ச்சி நடக்காத இடத்தில பிரமாண்டமான பந்தல் போட்டதும் தான் மிச்சம். இதைத் தவிர வேறு எந்தவிதமான சம்பவங்களும் புதுக்கோட்டையில் நடக்கவில்லை.
அடுத்ததாக விராலிமலை தேர்தலுக்காக வரவில்லை எனக் கூறுகிறார். ஆனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவர்சில்வர் பெரிய பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் என வீட்டுக்கு வீடு பரிசு கொடுத்துள்ளார். ஒரு வீட்டுக்கு 2000 மதிப்புள்ள பொருட்களை முதல் கட்டமாக விநியோகிக்கத் துவங்கி இருக்கிறார்.
இதுதான் தூய்மையான ஆட்சி. மக்களுக்கு எதுவுமே நாங்க ஓட்டுக்கு கொடுக்க மாட்டோம், ஆனா மக்கள் எங்களுக்கு ஓட்டு போடுவாங்கன்னு சொல்ற தூய்மையான ஆட்சியில், விஜயபாஸ்கர் 90,000 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு தவறாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எத்தனை கோடியை அங்கே கொட்டப் போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ஒரு பதம் என்பார்கள். எனவேதான் விராலிமலையை இங்கே உங்களுக்கு நான் உதாரணமாக சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
எனவே விராலிமலை தேர்தலுக்காக அவர்கள் வேலை செய்யவில்லை என்று சொன்னாலும், பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் ஒரு முதலமைச்சர் வந்து சென்றிருக்கிறார்.” என தெரிவித்தார்.