தி.மு.க. தலைமை மீது அதிருப்தி: அ.தி.மு.க.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?

ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
Thoppu venkatasalam
Published on

ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. கலைக்கப்பட்டு அதிலிருந்த பெருந்துறை, பவானி சட்டமன்ற தொகுதிகளில் பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது.

அ.தி.மு.க.வில் இருந்த போது 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். சில மாதங்களில் அவரை வருவாய்த்துறை அமைச்சராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.

2 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த தோப்பு வெங்கடா சலம், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை பறித்த ஜெயலலிதா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி யையும் பறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கொடுத்தார்.

அதற்கு முன்பு வரை ஈரோடு மாவட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனும், சு.முத்துசாமியும் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளாக இருந்தனர். 2009-ம் ஆண்டில் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் செங்கோட்டையனின் கரம் வலுவானது.

செங்கோட்டையனின் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்த பிறகு கிட்டத்தட்ட ஈரோடு மாவட்ட அ.தி.மு.க .தோப்பு வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.

தோப்பு வெங்கடாசலம், 2016-ம் ஆண்டு மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் இருந்தபோது தோப்பு வெங்கடாசலத்திற்கு பதவி தரவில்லை.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிட்டு 9,900 வாக்குகளை பெற்றார். தேர்தல் தோல்விக்கு பின் தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.

2025-ம் ஆண்டு பெருந்துறை, பவானி ஆகிய 2 தொகுதி களையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.

கட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட திலிருந்து இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக வேகமாக பணியாற்றினார்.பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிகள் எப்போதும் அ.தி.மு..கவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதி களிலும் நிச்சயம் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்ப ணிப்பேன் என்று கூறி பணியாற்றி வந்தார். ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தோப்பு வெங்க டாசலம் தோல்வி அடைந்தார்.

பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். விரைவில் பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். பெருந்துறை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் த.வெ.க.விலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவை அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் கூறிவிட்டார். எனவே மீண்டும் அவர் அ.தி.மு.க.வில் இணைவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com