5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

சீதேவி கிராமத்தில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Published on: 
Summary

உள்ளூர் மக்களால் சாவடிக்கல் என்று அழைக்கப்படும் குன்று பகுதியில் உள்ள பாறையில் செங்காவி நிற ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சீதேவி கிராமத்தில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் விஜயரங்கம், தொல்லியல் ஆய்வாளர் பண்ருட்டி இம்மானுவேல் மற்றும் எறையூரை சேர்ந்த குழந்தை ராஜ் ஆகியோர் சீதேவி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உள்ளூர் மக்களால் சாவடிக்கல் என்று அழைக்கப்படும் குன்று பகுதியில் உள்ள பாறையில் செங்காவி நிற ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

சாவடிக்கல் குன்றில் இரு பாறைகள் செங்குத்தாக நின்றவாறு உள்ளன. அதில் ஒரு பாறையின் மையப்பகுதியில் பெரிய அளவிலான மான் உருவம் நீண்ட கிளைகளுடன் கூடிய கொம்புகளுடன் செங்காவி வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இந்த மானின் எதிர்ப்புறம் மனித உருவம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை தூக்கியும், கையில் ஆயுதம் ஏந்தியவாறும் அந்த உருவம் உள்ளது. இது தொல்மாந்தர்களின் வேட்டை காட்சியை நினைவூட்டுகிறது.

மனித உருவம்

மனித உருவத்தின் வெளிப்புற கோடுகள் அடர் சிவப்பு நிறத்திலும், உட்புறம் வெளிர் சிவப்பு நிறத்திலும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கொம்பு மானின் மேல் வலப்புறத்தில் சிறிய மான் உருவமும் வரையப்பட்டுள்ளது. இவ்வோவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளதால் வரைவதில் தேர்ந்தவரால் மட்டுமே வரையப் பட்டிருக்க வேண்டும். இவை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

மேலும் இம்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்கால பானை ஓடுகள் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நாகரிகம் சிறப்பாக இருந்துள்ளது தெளிவாகிறது என்றனர்.

X