

விவசாய மின் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரிய இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2026-27ம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்குவதற்காக, வட்டார வாரியாக இலக்குகளை நிர்ணயித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நடப்பாண்டில் ஏற்கனவே மின் இணைப்பு வழங்குவதற்குத் தயார் நிலையில் உள்ள 48,944 விண்ணப்பங்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 1,056 விண்ணப்பங்கள் என மொத்தம் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க வட்டார வாரியாக மின் இணைப்புகள் வழங்குவதற்கான இணைப்புகளை நிர்ணயித்து அதன் அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு முதலில் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் இணைப்புக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தல், மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல், மோட்டார் மற்றும் பம்ப் செட் பொருத்துவதற்கான தயார் நிலையை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்பகிர்மான விதிகளின்படி மின் வாரிய அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மின் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான பெரிய அளவிலான மின் பொருட்கள் தேவைப்பட்டால், உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைப் பொறியாளர் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை ஒதுக்கீடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளையும் உரிய காலத்திற்குள் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மின்வாரிய இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார்.