

காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் செவிலிமேடு அருகே பாலாற்றின் குறுக்கே கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. கனரக வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அதிக வாகனங்கள் போக்குவரத்தால் பாலத்தில் உள்ள தார் சாலை அவ்வப்போது சேதம் அடைந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு ரூ.60 மதிப்பீட்டில் 900 மீட்டர் தூரம் கொண்ட புதிய கூடுதல் மேம்பாலம் கட்டும் பணிகள் ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது பாலாற்று பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய பாலப்பணியை அமைச்சர்கள் தென்னரசு, ஆர்.வி.ரஞ்சித் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பழைய பாலத்தின் சேதம் குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டறிந்தனர். சரியான முறையில் பாலத்தை பராமரிக்காததால் இதுபோன்ற அதிர்வுகளும் சேதங்களும் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புதிய பாலப்பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அமைச்சர்கள் தென்னரசு, ஆர்.வி.ரஞ்சித் குமார் உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா, மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அரவிந்த், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, கோட்ட பொறியாளர் வடிவேலு, உதவி இயக்குனர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.