

தமிழ்நாட்டில் சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் இனி அரசு ஆஸ்பத்திரிகளில் ரூ.1,100 கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற முடியாதவர்களுக்கும் இந்த புதிய திட்டம் உதவியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வசதி இல்லாத ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரியை நம்பியே வாழ்கிறார்கள்.
2 சிறுநீரகமும் செயலிழந்த நோயாளிகள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். வாரத்துக்கு 2 அல்லது 3 முறை டயாலிசிஸ் செய்து சிறுநீரகம் தானமாக கிடைக்கும் வரை உயிருக்காக போராடுகின்ற நிலை உள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள். ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் செய்து கொள்ள காத்திருக்க வேண்டிய நிலையும் தாமதமும் ஏற்படுகிறது. அதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிக கட்டணம் செலுத்தி டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் செய்ய வழிவகை காணப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் இனி முதல்வர் காப்பீடு இல்லாதவர்களும் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சைகளை பெற முடியும்.
சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்படுகிறது. அது போலவே டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் என 146 இடங்களில் டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன. கடந்த நிதியாண்டில் 9400 நோயாளிகளுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்துடன் டயாலிசிஸ் சிகிச்சை முறை இணைக்கப்படும்போது அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அந்தந்த பகுதிகளில் டயாலிசிஸ் செய்து கொள்ள முடியும்.
இது குறித்து அதன் மேலாண்மை இயக்குனர் எஸ்.பி.அம்ரித் கூறுகையில், ‘முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு டயாலிசிஸ் சிகிச்சைக்கு தற்போது ரூ.1,100 ஒதுக்கப்படுகிறது. அதே கட்டணத்தில் காப்பீடு இல்லாதவர்களுக்கும் அந்த சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது.
ஸ்கேன் பரிசோதனைகளுக்கு தனியாரை விட பல மடங்கு குறைவாக அரசு கட்டணம் வசூலிக்கிறது. அதைப்போலவே டயாலிசிஸ் சிகிச்சைகளையும் வழங்க ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.
இதற்கான திட்ட முன்மொழிவு அரசின் பரிசீனையில் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.