

ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தாராபுரம் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமா அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்டம்பர் 19-ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலும், குறிப்பாக தாராபுரம் தொகுதியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 வாக்காளர்களில், தாராபுரம் தொகுதியில் மட்டும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். பெண் வாக்காளர்களின் ஆதிக்கமே இந்த தொகுதியின் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும், வாக்காளர்களின் வசதிக்காக 186 வெவ்வேறு இடங்களில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
முன்னதாக, கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 1,99,944 வாக்குகள் பதிவாகின. அதில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் திவ்யா 6,026 வாக்குகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்தனர். இதுதவிர பல்வேறு சின்னங்களில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பிரித்தனர். தாராபுரம் தொகுதியின் அரசியல் வரலாற்றை ஆராயும்போது, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், பாட்டளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக 2001-ல் பா.ம.க.வும், 2011 மற்றும் 2026-ல் அதிமுகவும், 2016-ல் காங்கிரசும் வெற்றி பெற்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், பா.ஜ.க.வின் எல்.முருகனை வீழ்த்தி வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.