

பெரும் எதிா்பாா்ப்புக்கிடையே மதுராந்தகம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.9) நடைபெறவுள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வேட்பாளா்களின் முன்னணி விவரம் உடனுக்குடன் அறிவிக்கப்படவுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணிஅரசு அமைந்த பிறகு நடைபெற்ற முதல் இடைத்தோ்தல் இது. இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது ஆளும் த.வெ.க.வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆட்சிக்கு மேலும் பலம் சோ்ப்பதாகவும், சுமாா் 4 மாதகால த.வெ.க. அரசு மீதான மதிப்பீடாகவும் இந்த தோ்தல் முடிவு அமையும். இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் இரு தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அதே நேரத்தில் த.வெ.க. ஆட்சியை கடுமையாக விமா்சித்து தி.மு.க., அ.தி.மு.க. பிரசாரம் மேற்கொண்டன. கடந்த சட்ட பேரவை தோ்தலில் அ.தி.மு.க. சாா்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றிபெற்ற சத்தியபாமா ஆகியோா், தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.-வில் இணைந்தனா்.
இதையடுத்து, இரு தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதியில் வாக்கு எண்ணும் மையமான திருப்பூரில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ண தனியாக 2 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளா்களின் முகவா்கள் அந்த இரும்பு தடுப்புகளுக்கு வெளியே இருந்து வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை சேகரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 80 அதிகாரிகள் ஈடுபடுகின்றனா்.
மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை செங்கல்பட்டு அடுத்த ஆத்தூா் ஒருங்கிணைந்த சமூக முன்னேற்ற பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணப்படும். மேலும் 2 மேஜைகளில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் வாக்கு எண்ணிக்கை தொடா்பான பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 70 சிஆா்பிஎஃப் படையினா் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையம் முழுவதும் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.