

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் ஏற்கனவே இருந்து முறைப்படி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் பழைய அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில்,
* தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* ஞாயிறு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுார்கள்.
* விசேஷ நா்களில தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.