

தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை முறையாக மூடி வைப்பதுடன், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், சாலை யோரங்கள் மற்றும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மழைநீர் தேங்கக் கூடிய திறந்தவெளிப் பகுதிகள், காலி மனைகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தேவையற்ற வகையில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, கொசுப்புழு உற்பத்தியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுமக்களும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை முறையாக மூடி வைப்பதுடன், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.