தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மதுரையிலும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்ட்டில் 3 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னர் அவர்களுக்கும் டெங்கு பாதிப்பு இருக்கிறதா? என்று தெரிய வரும்.
இதனிடையே மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணியினை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.
கொசு மருந்து தெளிப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் பழைய குப்பைகள், டயர், சிரட்டை உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருட்கள், பராமரிப்பின்றி கிடக்கிறதா? என்று அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சுற்றுப்புற பகுதிகளை தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைநீர் மற்றும் தண்ணீர் நீண்ட நாட்கள் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும்.
கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளில் போதிய சுகாதார நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
இதற்காக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 75-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் குழுக்களாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பள்ளிகள், கல்லூரிகள், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்து கொசு மருந்து தெளிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் சுகாதாரத்துறை சார்பில் தினமும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றும், இது தொடர்பாக மேல் நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அவசர உதவி எண் 104 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.