

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதேபோல், அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வார்டில் சிகிச்சை பெற ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், தீவிர சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரையிலும் தினசரி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற ஆஸ்பத்திரிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில், காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கும் வகையில் பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, முன்னுரிமையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளிலேயே போதிய அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் சூழலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
அதேநேரம், வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து கட்டணம் மாறுபட்டிருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் 104 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதே நேரம் வீடுகள், சுற்றுப்புறங்களில் மழை நீர் மற்றும் நன்னீர் தேங்கக்கூடிய வகையிலான பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றனர்.