சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு அவதூறு: துறைத் தலைவர் பேராசிரியர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம்!

பேராசிரியர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Professor Suspended
Published on: 
Summary

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில், வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் ராஜேந்திரன் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அலுவலகத்தில் நடந்த அநாகரீகம்

அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மாணவி ஒருவர், இப்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் மூன்றாம் ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த மாணவி துறை ரீதியான பணிக்காக வேதியியல் துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த வேதியியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான ராஜேந்திரன், அந்த மாணவியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து மிகவும் அவதூறாகவும், அநாகரீகமான முறையிலும் பேசி வசைபாடியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் வழக்கு மற்றும் சஸ்பெண்ட் உத்தரவு

பேராசிரியரின் இந்த அநாகரீகச் செயலால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து உடனடியாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ராஜேந்திரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பேராசிரியர் ராஜேந்திரனைப் பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகப் பதிவாளர் சிங்காரவேலு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com