

கடந்த வாரம் ஒரே நாளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மட்டும் 2.5 டன்னுக்கும் அதிகமான பொருட்கள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த தீபாவளிக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து இனிப்பு மற்றும் கார பொருட்களின் ஏற்றுமதி 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளுக்கு இங்கிருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் கடுமையான லாப இழப்பை சந்தித்திருந்தனர்.
இருப்பினும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் நெய் பலகாரங்களுக்கு உள்ள தொடர் மவுசு காரணமாக இந்த ஆண்டு ஏற்றுமதி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. குறிப்பாக டெக்சாஸ், நியூ ஜெர்சி மற்றும் கலிபோர்னியா போன்ற மாநிலங்களிலிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளன.
மேலும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சீஷெல்ஸ் நாடுகளுக்கு தீபாவளி பலகாரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீஷெல்ஸ் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்து இனிப்புகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அங்குள்ள தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் பாரம்பரிய முறுக்கு மற்றும் பிற தின்பண்டங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கணிசமாக வசிப்பதால் அங்கேயும் ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது ஆன்லைன் ஆர்டர்களை கூரியர் மூலமாகவும் அனுப்பி வருகின்றனர். லாப வரம்பு சற்று குறைந்துள்ள போதிலும், பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்ய ஆர்டர்கள் குவிந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மட்டும் 2.5 டன்னுக்கும் அதிகமான பொருட்கள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தினால் பல ஏற்றுமதியாளர்கள் கொழும்பு வழியாக சரக்குகளை அனுப்ப வேண்டியுள்ளது. பாரம்பரிய இனிப்புகள் மற்றும் முறுக்கு போன்ற கார வகைகளுக்கு விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் சரக்கு கட்டணத்தை குறைத்து கூடுதல் இடவசதி செய்து தந்தால் ஏற்றுமதியாளர்கள் மேலும் பலனடைவார்கள் என்று ஏற்றுமதி சங்கத்தின் செயலாளர் கோரியுள்ளார்.
பல ஏற்றுமதியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியை குறைத்து கொண்டு அல்லது முற்றிலுமாக தவிர்த்துவிட்டு ஆப்பிரிக்க சந்தைகளுக்குத் திரும்பியுள்ளனர்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் சந்திக்கும் விமானப் பயணச்சிக்கல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை உயர்வு (10-15 சதவீதம்) ஆகியவை வாடிக்கையாளர்களை பாதிக்கின்றன. இருப்பினும், இனிப்பு மற்றும் கார வகைகளின் ஏற்றுமதி தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் 5-8 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏற்றுமதி சந்தைகளில் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
பலகாரங்களின் விலை விவரங்கள் (நெய் இனிப்புகள்): கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை (மைசூர் பாக், பாதம் அல்வா, நெய் லட்டு போன்றவை). பால் இனிப்புகள்: கிலோ ரூ.500-க்கு மேல் (பால்கோவா, ரசகுல்லா போன்றவை). கார வகைகள்: கிலோ ரூ.450 முதல் ரூ.1,800 வரை (நவரத்தினா மிக்சர், முறுக்கு, பொரித்த முந்திரி போன்றவை).
பலகாரங்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் 20 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும் வகையில், 'மாற்றியமைக்கப்பட்ட வளிமண்டல பேக்கேஜிங்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பாக்கெட்டு க்குள் இருக்கும் காற்றுக்கு மாற்றாகத் தகுந்த வாயுக்களின் கலவை நிரப்பப்பட்டு, பலகாரங்களின் தரம் பாதுகாக்கப்படுகின்றது.
திருச்சி விமான நிலைய சரக்குப் போக்குவரத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சரக்கு கையாளுதல் அளவு 2024-25 நிதியாண்டில் 6,473.5 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்கு அளவு 2025-26 நிதியாண்டில் 7,184.2 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. சரக்கு வருவாய் 2024-25 நிதியாண்டில் ரூ.4.3 கோடியாக இருந்தது 2025-26 நிதியாண்டில் ரூ.4.8 கோடியாக அதி கரித்துள்ளது. திருச்சியில் மொத்த விமான இயக்கங்கள் ஆண்டுக்கு 18,552 ஆக உள்ளன. இதில் பன்னாட்டு இயக்கம் 9,375 ஆகவும், உள்நாட்டு இயக்கம் 9,177 ஆகவும் பதிவாகியுள்ளன. சரக்கு கையாளுதல் 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சரக்கு வருவாய் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.