அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு 'SOFA MODEL' என திமுக கிண்டல்: சட்டசபையில் பரபரப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம் வழங்கவில்லை.
Minister Vanni Arasu
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆற்றிய உரை பேரவையில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்து, எதிர்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று முழக்கமிட்டதால் அவையில் கடுமையான கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது.

லித் பிரதிநிதித்துவம்

பேரவையில் உரை நிகழ்த்திய அமைச்சர் வன்னி அரசு, தலித் சமுதாயத்தின் அரசியல் உரிமை மற்றும் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து மிகக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தன்னைச் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும் அமைச்சரவையிலும் ஏன் பங்கு வழங்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தலித் தலைவர்களைப் பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதைச் சுட்டிக்காட்டி பெருமை பேசுவது, அவர்களைச் சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே காட்டுகிறது என்றும் சாடினார்.

சோஃபா மாடல் என கிண்டல்

விசிகவுக்கு வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு மதிப்பளித்து அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டபோது எதிர்த்தரப்பினர் கொதிப்படைந்தனர். இதற்கிடையே அமைச்சர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, திமுக உறுப்பினர்கள் 'சோஃபா மாடல்' என்று கிண்டல் செய்து குரல் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பலர் ஆவேசமாக எழுந்து நின்று ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் வன்னி அரசுவை மேலும் பேச விடாமல் தடுத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் கடுமையான காரசாரமான சூழல் நிலவியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com