

சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாகச் சீரமைத்து, தடையின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் சின்னம்பள்ளி அருகே தோளூர், தோளூர் கோம்பை, ஆர்.ஆர்.அள்ளி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் சேதமடைந்ததால், கடந்த 5 முதல் 6 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
பெரும்பாலை முதல் ஐந்தாவது மைல் வரையிலான சாலையோரங்களில் உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளின்போது ஆங்காங்கே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் சேதமடைவதாகக் கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாகச் சீரமைத்து, தடையின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.