ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே செடியில் இரு வண்ண டேலியா மலர்கள் - செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

2-ம் சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான வண்ண மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
Dahlia flowers
Published on
Summary

பசுமையான பூங்காவிற்கு நடுவே மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மலர்ந்துள்ள டேலியா மலர்கள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனை போலவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிலவும் இரண்டாம் சீசனிலும் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம்.

இந்த நிலையில், 2-ம் சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான வண்ண மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் பல செடிகள் பூக்க தொடங்கியுள்ளதால், பூங்காவின் பல பகுதிகளும் வண்ணமயமாக காட்சியளிக்க தொடங்கியுள்ளன.

இதில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது ஒரே டேலியா செடியில் பூத்துள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மலர்கள். ஒரே செடியில் இருவேறு வண்ணங்களில் அழகாக மலர்ந்துள்ள டேலியா பூக்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசிப்பதுடன், அவற்றின் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

பசுமையான பூங்காவிற்கு நடுவே மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மலர்ந்துள்ள டேலியா மலர்கள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.

2-ம் சீசனில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பெட்டுனியா, சால்வியா, டேலியா, மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்ச் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர்ச்செடிகளுக்கு தேவையான தண்ணீர் ஊற்றுதல், களைகளை அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com