

டீக்கடையாக இருந்தாலும் மின்சார கட்டணத்தில் இந்த சலுகை அளிக்கப்படும்.
சென்னை:
ஈரான் போர் காரணமாக வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக முடங்கி உள்ளது.
ஓட்டல்களில் கியாசுக்கு பதிலாக விறகு அடுப்புகள் மூலம் சமையல் செய்வதால் பல்வேறு உணவுகள் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளன. பல இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டல் உரிமையாளர்கள் சென்னை தலைமை செயலகத்துக்கு சென்று ஓட்டலில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் உணவுத்துறை அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரையில் ஓட்டல்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மின் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-
ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகளில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மின்சார அடுப்பு பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு போதிய அளவில் மின்சாரம் வழங்கப்படும். மின்சார அடுப்பு பயன்படுத்தும் நிலையில் ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகளில் மின்சார பயன்பாட்டு அளவு அதிகரிக்கும் நிலையில் அவர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரையில் உணவகங்கள், டீக்கடைகளுக்கு கியாசுக்கு மாற்றாக மின் அடுப்புகளை பயன்படுத்தினால் கூடுதலாக வரும் மின்சார பயன்பாட்டில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியமாக வழங்கப்படும்.
டீக்கடையாக இருந்தாலும் மின்சார கட்டணத்தில் இந்த சலுகை அளிக்கப்படும். கூடுதல் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரையில் இந்த சலுகை தொடரும். கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தினால் கூடுதலாக மின்சார தேவையும் அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்தி இந்த சலுகையை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
வணிக நிறுவனங்கள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த சலுகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் ஏ.சி. பயன்பாடு உள்ளிட்ட என்ன காரணத்தால் மின் கட்டணம் அதிகரித்துள்ளது என்று பிரித்து பார்க்க மாட்டோம். அனைவருக்குமே யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும்.
இதனால் இந்த மானியம் எல்லோரையும் போய் எளிதாக சேரும்.
மேலும் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் மின் அடுப்புகளை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் மின் அடுப்புகளை வாங்குவதற்காக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.25 லட்சம் கடன் மானியத்துடன் வழங்கப்படும்.
பெண்களுக்கு மகளிர் தொழில்முனைவோர் திட்டத்தின்கீழ் 25 சதவீதம் அல்லது ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். அம்பேத்கார் தொழில் முன்னோடி திட்டத்தின்கீழ் 35 சதவீதம் அல்லது ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 60 ஆயிரத்து 698 தொழிற்சாலைகளில் தற்போது விறகு மற்றும் கியாஸ் ஆகியவற்றை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தகவல் சொல்லிவிட்டு மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரி பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி-பழங்கள் வீணாவதாக கவலைப்படுகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் உள்ள 194 உழவர் சந்தைகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி காய்கறி, பழங்களை விற்பனை செய்யலாம் என்றார்.