வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல் - வானிலை ஆய்வு மையம்

மாநிலம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
weather
Published on: 
Summary

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று மிக தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. அர்னாப் புயல் படிப்படியாக வலுவடைந்து தீவிர, மிக தீவிரப்புயலாக வலுப்பெறும். அர்னாப் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும். மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் புயல் நகர்கிறது. வரும் 28-ந்தேதி ஆந்திர கடற்கரையை புயல் நெருங்கும். பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே 28-ந்தேதி கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 140 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அர்னாப் புயலால் தமிழ்நாட்டில் மழை பாதிப்பு இருக்காது. மழை குறையும். டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

புயல் காரணமாக சூறைக்காற்று வீசி வருவதால், 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com