

சென்னை உள்ளிட்ட வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆங்காங்கே கன முதல் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது.
இது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புயல் குறித்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (16-ந்தேதி) அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இது திரிகோண மலையில் இருந்து (இலங்கை) சுமார் 630 கி.மீ. கிழக்கு வட கிழக்கிலும், ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து (அந்தமான் நிக்கோபார் தீவுகள்) 680 கி.மீ. மேற்கிலும், சென்னையில் இருந்து 720கி.மீ. கிழக்கு- தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து (ஆந்திரா) 820 கி.மீ. தெற்கு-தென்கிழக்கிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கு 940 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடல் மத்திய பகுதிகளில் அக்வான் புயலாக மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து 19-ந்தேதி இரவு ஆந்திர கடற்கரைக்கு அருகில் மேற்கு-மத்திய வங்கக்கடலை மிக தீவிரப் புயலாக அடைய வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் நாளை 17 மற்றும் 20-ந்தேதி தேதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆங்காங்கே கன முதல் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆங்காங்கே கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
புயல் கரையை கடக்கும்போது ஆந்திர மற்றும் ஒடிசா கடல் பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோ பார் தீவுகளின் கடற்பரப்பு பகுதிகளில் நாளை வரை 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில், சில நேரங்களில் 70 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசும்.
தென்மேற்கு வங்கக்கடல், மேற்கு மத்திய வங்கக் கடல், கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் 65 கி.மீ.வேகத்தில் சூறாவளி காற்று இன்று முதல் வீச கூடும். சில சமயங்களில் 90 கிலோ மீட்டர் வேகம் அதிகரித்து புயல் காற்றாக மாற வாய்ப்புள்ளது.
18 மற்றும் 19-ந்தேதிகளில் 100 கி.மீ. வரை சில நேரங்களில் 110 கி.மீ. வரை காற்று அதிகரிக்கக்கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.