

தலைமறைவாக உள்ள ஜம்புலிங்கம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கக்கன் நகரை சேர்ந்தவர் காமராஜ் மகன் தங்கவிக்ரம் (40). நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் வழக்கறிஞர்கள் நலச்சங்க தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் வக்கீல் தங்கவிக்ரம் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சூழ்ந்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கை, முகம், கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொடூரத் தாக்குதலுக்கு முன்பகை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காட்டுமன்னார்கோவில் அடுத்த மதகடி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற ஜம்புலிங்கம் என்பவரது மாடு திருடு போன வழக்கில் வக்கீல் தங்கவிக்ரம் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் தங்கவிக்ரம் முன்ஜாமீன் பெற்றதால் இருகுடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஜம்புலிங்கம் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் நீதி மன்றத்தில் அவர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு வக்கீல் தங்கவிக்ரம் தான் காரணம் என ஜம்புலிங்கத்தின் குடும்பத்தினர் பழிவாங்க நினைத்துள்ளனர்.
மேலும் வக்கீல் தங்கவிக்ரமனை தீர்த்துக்கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என ஜம்புலிங்கமும், அவரது மனைவி நிலவழகியும் சேர்ந்து திட்டம் தீட்டி, கூலிப்படையை ஏவி இக்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கக்கன் நகரில் பதுங்கியிருந்த ஜம்புலிங்கத்தின் மனைவி நிலவழகி (46) என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஜம்புலிங்கம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை தலைமறைவாக இருந்த ஜம்புலிங்கம் (45), ரமணா என்கிற சீமன்நாராயணன் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.