

பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு ஏதேனும் திடீர் மரணம் ஏற்பட்டால் அதுகுறித்து தகவல் அளிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு பறவை காய்ச்சலின் தாக்கம் இருப்பதாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பண்ணைகளில் இருந்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு எச்5என்1 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சுமார் 3 கிமீ சுற்றளவில் செயல்படும் பண்ணைகளில் இருந்த கோழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
கடலூரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பின் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 1100 கோழி பண்ணைகளில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தற்போது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 1100 கோழிப்பண்ணைகளில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பறவை காய்ச்சல் தாக்கம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சலின் தாக்கம் இல்லை.
இருந்தபோதிலும் கால்நடை பராமரிப்பு துறையினர் தொடர்ந்து கோழிப்பண்ணைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு ஏதேனும் திடீர் மரணம் ஏற்பட்டால் அதுகுறித்து தகவல் அளிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவ்வாறு தகவல் ஏதும் வந்தால் கோவையில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் கோழிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.