

குழந்தை இல்லாமை மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத மன உளைச்சலால், அருண்குமார் தனது மனைவி மாலதியை கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்துகொண்டார். துர்நாற்றம் காரணமாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணையில் மாலதியின் கடிதம் மூலம் காரணங்கள் தெரியவந்துள்ளது.
அம்பத்தூர் பாடி படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அருண்குமார் (41) மாலதி (38) தம்பதியினர். 2018 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து கடந்த ஏழு வருடங்களாக குழந்தையும் இல்லை, நிரந்தர வேலையும் இல்லை என்பதால் இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இன்று காலை அருண்குமாரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. துர்நாற்றம் தொடர்பாக வீட்டின் ஜன்னலில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது அருண்குமார் தூக்கிட்டபடி சடலமாக இருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார், கொரட்டூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் அருண்குமார் தூக்கிட்டு நிலையிலும், மனைவி மாலதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக இருந்தனர். மேலும் இருவரும் உயிரிழந்து இரண்டு நாட்களுக்கு மேலானதால் உடல் சற்று அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி உள்ளது. உயிர் இழந்தால் துர்நாற்றம் வீசக்கூடாது என வீட்டில் ஏசியை போட்டபடி தற்கொலை செய்துள்ளனர்.
கொரட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அவர்களது வீட்டில் தற்கொலைக்கான காரணங்கள் தொடர்பாக தேடியபோது மாலதி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் கடந்த ஏழு வருடங்களாக குழந்தை இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் இருவருக்கும் வேலைவாய்ப்பு இல்லாததால் வீட்டின் அத்தியாவசிய தேவைக்கு கூட கஷ்டப்பட்ட நிலையில் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய உயிரிழப்பிற்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதத்தில் தெரிவித்து இருந்தார். கடிதத்தில் தன்னை கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள இருக்கிறார் எனவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
குழந்தை மற்றும் நிரந்தர வேலை இல்லை என கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.