குமரி மாவட்டத்தில் மழை- திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் சாரல் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் மழை- திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
Published on: 

குமரி மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் நேற்று மதியத்திற்கு பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டாறு சாலை, அவ்வை சண்முகம் சாலை, அசம்பு ரோடு உள்பட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெள்ளம்

நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீர் நிரம்பி, மழைநீருடன் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. நாகராஜா கோவில் அருகே கழிவுநீருடன் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றினர்.

குழித்துறை

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. மாம்பழத்துறையாறு, இரணியல், குளச்சல், தக்கலை, கன்னிமார், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கியாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் சாரல் மழை பெய்தது.

மழை

அடையாமடை பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இடி-மின்னலுடன் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அப்பகுதி வெள்ளக்காடானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அங்கு 18 சென்டிமீட்டர் (179.6 மில்லிமீட்டர்) மழை பதிவாகி உள்ளது.

திற்பரப்பு

திற்பரப்பு அருவிப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இன்று காலையிலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவியின் ஒருபுறத்தில் மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சிப்பாறை

கனமழை காரணமாக கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.27 அடியாக இருந்தது. அணைக்கு 760 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 235 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.30 அடியாக உள்ளது. அணைக்கு 589 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.75 அடியாகவும், சிற்றாறு 2-ன் நீர்மட்டம் 14.85 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 14.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.27 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 5.60 அடியாக உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அடையாமடை-179.6

பெருஞ்சாணி-127.6

சிற்றாறு 2-128.6

புத்தன்அணை-112

சிற்றாறு 1-111.8

ஆணைக்கிடங்கு-108.2

மாம்பழத்துறையாறு-97.6

குருந்தன்கோடு-97

திற்பரப்பு-88

களியல்-84

தக்கலை-80

பேச்சிப்பாறை-67.6

இரணியல்-46

சுருளோடு-45.4

ஆரல்வாய்மொழி-42

பூதப்பாண்டி-33.8

கோழிப்போர்விளை-30

குழித்துறை-28.6

நாகர்கோவில்-27.8

முள்ளாங்கினாவிளை-26.2

கன்னிமார்-26.2

குளச்சல்-26

பாலமோர்-23.6

முக்கடல்-20

மயிலாடி-13.4

X

Maalai Malar
www.maalaimalar.com